நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
முன்விரோதம், கட்டபஞ்சாயத்து, கள்ளக் காதல், தொழில் போட்டி என பல்வேறு காரணங்களால் கொலைகள் அரங்கேறுகின்றன. பழிக்கு பழி, சாதி உணர்வு மக்கள் மனதில் வேறுன்றி வி்ட்டதால் கொலையாளிகள் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வரும் வரை காத்திருந்து பகையை தீர்த்து கொள்கின்றனர்.
ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.
ஓசிக்கு பீடி தர மறுத்தவர் வெட்டிக் கொலை, கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை என அற்ப காரணங்களுக்காக கூட கொலை செய்யப்படுகிறார்கள்.
கடந்த இரு மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மே 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏசி அருணா வாக்கிங் செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டார்.
கடந்த 9ம் தேதி கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் அண்ணியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டம்பாறை அருகே உள்ள செட்டியூரில் நடத்தை சந்தேகத்தில் பிரேமா என்பவரின் தலையில் கல்லை போட்டு அவரது கணவரே கொலை செய்தார்.
2ம் தேதி பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ராமையா என்பவர் தாழையுத்தில் குடிபோதையில் ஒரு வீட்டு முன் படுத்திருந்தபோது கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.
4ம் தேதி தாழையுத்து சாலுன் கடையில் வைத்து பாபு என்பவர் முன்விரோதம் காரணமாக கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அதே நாளில் சங்கரன்கோவில் எழில் நகரை சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி அய்யம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்.
5ம் தேதி கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் அடித்து கொல்லப்பட்டார். நெல்லை ரயில் நிலையத்தில் அல்வா வியாபாரம் செய்த பிச்சையா என்பவர் தொழில் போட்டி காரணமாக அருகன்குளத்தில் வைத்து வெட்டி சாய்க்கப்பட்டார்.
13ம் தேதி மானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கள்ளகாதலியால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்டார்.
வீரவநல்லூரில் நேற்று முன்தினம் இரவு திமுக நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தை பொறுத்த வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அதிக கொலை நடந்துள்ளதாக புளளி விபரங்கள் கூறுகின்றன.
கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment