வள்ளியூர்: தமிழக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் வள்ளியூர் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்துள்ளனர். பசுபதி பாண்டியனை வேவு பார்க்கவே வந்தோம். அவர் தனியாக இருந்ததால் சுற்றி வளைத்து வெட்டிக் கொன்று விட்டோம் என்று அவர்கள் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
பசுபதி பாண்டியன் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையை 3 பேர் கொண்ட கும்பல் செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஆறுமுகசாமி, இவர் சுரண்டையைச் சேர்ந்தவர். இன்னொருவர் பெயர் அருளானந்தம், இவர் முள்ளக்காட்டைச் சேர்ந்தவர். இருவரும் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துக் கோர்ட்டில் அவர்கள் இருவரும் கூறுகையில், பசுபதி பாண்டியனின் இருப்பிடத்தை வேவு பார்க்கும் நோக்கில்தான் வந்தோம். ஆனால் நாங்கள் வந்தபோது அவர் தனியாக அமர்ந்திருந்தார். இதையடுத்து இதுதான் நல்ல சமயம் என்று கருதி வெட்டிக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக திண்டுக்கல் போலீஸார் நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். இதற்காக ஒரு தனிப் படை வள்ளியூர் விரைகிறது.
இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்த முழுவிவரங்களும் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இன்னொருவர் திருப்பூரில் சிக்கினார்?
இதற்கிடையே, பசுபதி பாண்டியன் கொலையானபோது அவருடன் போனில் பேசிய நபர் ஒருவரை திருப்பூரில் வைத்து போலீஸார் மடக்கியுள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது வீட்டின் அருகே இருந்து மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். போலீசார் செய்து அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அந்த எண்ணுக்குரியவர், பசுபதி பாண்டியனுக்கு, நன்கு பழக்கமானவர் என்றும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர் என தெரியவந்துள்ளது. அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து பசுபதி பாண்டியனுக்குப் பாதுகாப்பாக எப்போதும் கூடவே இருக்கும் 20 பேரை, திண்டுக்கல் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த செல் எண்ணுக்குரியவர் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகளில் ஒன்று, நேற்று மாலை திருப்பூருக்கு விரைந்துள்ளது. அவர் போலீஸ் வசம் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் போலீஸ் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment