கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Sunday, February 26, 2012

ஜெயேந்திரர் தொலைபேசி உரையாடல் வழக்கு: சைபர் கிரைம் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;

வழக்கு என்ன?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை கொலை செய்ததாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதிக் கட்டத்தில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் தொலைபேசி மூலமாக "பேரம்" பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த தொலைபேசி உரையாடலையும் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி சென்னை பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து இந்த தொலைபேசி உரையாடல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதுவையில் நடைபெற்றும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் நீதிபதி ராமசாமியும் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார்.

இன்றைய உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. புதுவையில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு சைபர் கிரைமுக்கும் உத்தரவிட்டது.

அதாவது ஜெயேந்திரர், நீதிபதி ராமசாமி உள்ளிட்டோரின் உண்மையான குரலைப் பதிவு செய்து தொலைபேசியில் இருக்கும் குரலோடு ஒப்பிட்டு ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது நன்றி டேட்ஸ் தமிழ்

No comments:

Post a Comment