கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, August 29, 2012

இந்திய-அமெரிக்கரின் ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர் திணேஷ் டிசோசா என்பவர் தயாரித்துள்ள ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மும்பையில் பிறந்தவர் திணேஷ் டிசோசா. தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று இந்திய அமெரிக்கராக வாழ்ந்து வருகிறார். இவர் 2016: Obama's America என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளார். இப்படம் அமெரிக்கா முழுவதும் 1091 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
ஒபாமாவை கடுமையாக சாடி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அமெரிக்கர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை 1800 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒபாமா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் விளக்கியுள்ளார் திணேஷ். இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வசூல் கிடைத்து வருகிறதாம்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான வார இறுதி நாட்களில் இப்படம் 6.2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம். ஒவ்வொரு காட்சிக்கும் சராசரியாக 5940 டாலர் பணத்தை இது வாரியுள்ளது. இதுவரை இப்படி ஒரு வசூலை சமீப காலத்தில் எந்தப் படம் ஈட்டியதில்லை என்கிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை மட்டும் இப்படம் 1.2 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
2.1 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இந்த டாக்குமெண்டரிப் படம். இப்படத்தின் பன்ச் லைன் - Love Him. Hate Him. You Don't Know Him - என்பதாகும். இப்படம் வெளியானது முதல் இதுவரை 10.3 மில்லியன் டாலரை வசூலித்துக் குவித்துள்ளதாம்.
இந்த ஆண்டில் மிகப் பெரிய வசூலை ஈட்டிய டாக்குமெண்டரிப் படம் என்ற பெயரையும் திணேஷின் டாக்குமெண்டரி பெற்றுள்ளது.
இப்படத்தை ஜெரால்ட் மோலன், டோக் செய்ன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜான் சல்லிவனுடன் இணைந்து திணேஷ் டிசோசா இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் மொத்தமாக புளோரிடாவில் குவி்ந்துள்ளனர். அங்குதான் குடியரசுக் கட்சியின் மாநாடு தற்போது நடந்து வருகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திணேஷ் டிசோசாவின் டாக்குமெண்டரி ஒபாமாவை பெரும் சரிவுக்குள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
திணேஷ் எழதிய The Roots of Obama's Rage என்ற நூலைத் தழுவித்தான் இந்த டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் தனித்துவத்தையும், அதன் ஆதிக்கத்தையும் நீர்த்துப் போகும் அளவுக்கு ஒபாமா செயல்பட்டு வருகிறார் என்றும் அவரது கென்யத் தந்தையிடமிருந்து வந்த அடிப்படை உணர்வுகளுடன் அவர் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அமெரிக்காவை அவர் தாழ்த்தி விட்டார் என்றும் இந்த டாக்குமெண்டரியில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒபாமா மீண்டும் அதிபரானால் நாடு பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் இதில் எச்சரிக்கைச் செய்தி தரப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த டாக்குமெண்டரிப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் பரபரப்பையும், சூடான விவாதங்களையும் ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை.

கசாப்புக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்-அப்பீல் மனு டிஸ்மிஸ்

டெல்லி: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் வழக்கில் தனக்கு மும்பை தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் மார்க்கமாக இரவில் புகுந்த தீவிரவாதிகள் பத்து பேர் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர். 3 நாட்கள் நடந்த இந்த பயங்கர தீவிரவாத தாக்குதலால் இந்தியாவே அதிர்ந்து நின்றது. உலக நாடுகள் இந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை டிவிகளில் நேரடியாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன.
கசாப்பை உயிருடன் பிடித்த எஸ்.ஐ. துக்காராம்
3 நாள் நடந்த வெளியாட்டத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனைப் பிடித்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். மிகவும் தீரத்துடன் செயல்பட்டு கசாப்பைப் பிடித்த அவர் தீவிரவாதிகளில் தாக்குதலில் சிக்கி வீரமரணம் அடைந்தார்.
வரலாறு காணாத இந்த தீவிரவாதத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் கசாப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மும்பை தனி நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை பின்னர் பாம்பே உயர்நீதிமன்றம் 2011, அக்டோபர் 10ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தான்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக கசாப்புக்காக வாதாட உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கல் கியூரியான ராஜு ராமச்சந்திரன் உச்சநீதி்மன்றத்தில்நடந்த வாதத்தின்போது கூறுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்தான் மும்பையில் நடந்த தாக்குதல். ஆனால் அந்த மாபெரும் சதித் திட்டத்தை உருவாக்கிய குழுவில் கசாப் இடம் பெறவில்லை. அதில் அவன் ஒரு அங்கமாக இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் முக்கியப் பங்காற்றியுள்ளான் கசாப். எனவே அவனை தூக்கில் தொங்க விடுவதே சரியானதாக இருக்க முடியும் என்று வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்த உசத்சநீதிமன்றம், கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து, அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அவனைத் தூக்கிலிட நாள் குறிக்கப்படும். இருப்பினும் கசாப் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனு மீது முடிவு வர வருடக்கணக்கில் ஆகும் என்பதால் கசாப் இப்போதைக்கு தூக்கிலிடப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவே.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை


என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை... அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் சக்தியை தருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு போட்டியின் நடுவே ஊக்கமளிக்க கூடிய பழ வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலர் திராட்சை. இதில் உள்ள தாமிரசத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

மஞ்சள்காமாலை நோயுள்ளவர்கள் தினமும் 2 வேளை இந்த பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். தொண்டைக்கட்டு பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகை தூள் செய்து, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டைக்கட்டு சென்ற இடமே தெரியாது.

மூல நோயுள்ளவர்கள் தினமும் உணவுக்கு பின்னர் காலை மற்றும் மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரண குணம் பெறலாம்

Sunday, August 12, 2012

கூடன்குளம் உலையில் யுரேனியம் நிரப்பும் பணி தொடக்கம்

நெல்லை,ஆக.12 - கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை தொடங்குகிறது. இதனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அணுமின் நிலைய பணிகள்  கடந்த மார்ச் 19ந் தேதி முதல் முழுவீச்சில் தொடங்கப்பட்டன.  இத்ைதொடர்ந்து  முதலாவது அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு வெப்ப சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் அணு உலையின் அழுத்தகலன்கள்  திறக்கப்பட்டு மாதிரி எரிபொருள்கள் அகற்றப்பட்டன.  இதையடுத்து முதல் அணுஉலையில் 163 யுரேனியம் எரிகோல்களை பொருத்துவற்கு அனுமதி கேட்டு கூடன்குளம் அணுமின்நிலையம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை  ஆணையத்துக்கு விண்ணப்பித்தது. இந்தநிலையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் கூறியதாவது:-
எங்கள் பாதுகாப்பு குழுவின்  பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் நாளை (திங்கள்கிழமை) முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 457 மீட்டர் நீளம் கொண்ட 163 எரிகோல்களிலும்  எரிபொருள்களை நிரப்ப இரண்டு வார காலம் ஆகும். இந்த பணியை பார்வையிட இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூடன்குளம் வருகின்றனர். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு உலையில் செறிவூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருளாகவும், குளிர்ச்சியூட்டும் பொருளாக தண்ணீரும் பயன்படுத்தப்படும். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

 
11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்.

1/1

சென்னை, ஆக.12 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (11.8.2012) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர் உள்பட 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழகத்தை ஒரு அறிவுசார் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். உயர் கல்வியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  உயர் நிலைக் கல்வி அளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.  கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது. 
இதன் அடிப்படையில், 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா 29.5.2012 அன்று ஆணையிட்டார். அதன்படி, சேலம் மாவட்டம் ​ எடப்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் ​ கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் ​ வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் ​ மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் ​ திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் ​ திருவொற்றியூர்; இராமநாதபுரம் மாவட்டம் ​ பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் ​ கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் ​ அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் ​ நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் ​ அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக  தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,  உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடன் தொல்லை: திருச்சியில் பிரபல ஹோட்டல் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி: திருச்சியில் பிரபல ஹோட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையம் அருகே உள்ளது கஜப்ரியா என்ற தனியார் ஹோட்டல். அதன் பங்குதாரர் லட்சுமணன்(51). அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாமா உடனே இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், நான் பல தவறுகள் செய்துள்ளேன். இது நானே எடுத்த முடிவு. என்னை மன்னிக்கவும். இது என் முடிவு. இனி என்னால் வாழ முடியாது என எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பல ஹோட்டல்களில் பங்குதாரராக உள்ள அவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடன் நெருக்கடி, குடும்பப் பிரச்சனை போன்றவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன லட்சுமணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்க வேட்டை: சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா

லண்டன்: கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் பதக்க வேட்டையில் சீனாவிடம் முதலிடத்தைப் பறி கொடுத்த அமெரிக்கா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதை தட்டிப் பறித்து முதலிடத்திற்கு முன்னேறி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
தடகளப் போட்டிகளின் உதவியுடன்தான் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது அமெரிக்கா.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்தது. அந்த ஒலிம்பிக்கில் சீனா 51 தங்கம் உள்பட 100 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.
36 தங்கம் உள்பட 110 பதக்கங்களுடன் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டது அமெரிக்கா. ரஷ்யா 3வது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும் இருந்தன.
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தொடக்கத்திலிருந்தே சீனாதான் முன்னணியில் இருந்து வந்தது. அமெரிக்கா 2வது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் சீனா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தடகளப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளியதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறி விட்டது அமெரிக்கா.
பதக்கப் பட்டியலில் தற்போது 44 தங்கம், 29 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 102 பதக்கங்களை அள்ளி முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா.
38 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறது சீனா.
கடந்த முறை 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த முறை வெகுவாக முன்னேறி, 28 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த முறை 3வது இடத்தைப் பிடித்த ரஷ்யா, இந்த முறை ஒரு படி இறங்கி 4வது இடத்திற்குப் போயுள்ளது. அந்த நாடு 21 தங்கம், 25 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 78 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும் கடந்த முறையை விட இந்த முறை அமெரிக்காவும், சீனாவும் குறைந்த அளவிலான பதக்கங்களையே வென்றுள்ளன. கடந்த முறை அமெரிக்கா மொத்தம் 110 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 102 பதக்கங்களே இதுவரை கிடைத்துள்ளது.
அதேபோல சீனா கடந்த முறை 51 தங்கம் உள்பட 100 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை 87 பதக்கமே அதற்கு இதுவரை கிடைத்துள்ளது.
இந்தியா, ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 56வது இடத்தில் நிற்கிறது.