திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையம் அருகே உள்ளது கஜப்ரியா என்ற தனியார் ஹோட்டல். அதன் பங்குதாரர் லட்சுமணன்(51). அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாமா உடனே இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், நான் பல தவறுகள் செய்துள்ளேன். இது நானே எடுத்த முடிவு. என்னை மன்னிக்கவும். இது என் முடிவு. இனி என்னால் வாழ முடியாது என எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பல ஹோட்டல்களில் பங்குதாரராக உள்ள அவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடன் நெருக்கடி, குடும்பப் பிரச்சனை போன்றவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன லட்சுமணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment