கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, August 29, 2012

இந்திய-அமெரிக்கரின் ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர் திணேஷ் டிசோசா என்பவர் தயாரித்துள்ள ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மும்பையில் பிறந்தவர் திணேஷ் டிசோசா. தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று இந்திய அமெரிக்கராக வாழ்ந்து வருகிறார். இவர் 2016: Obama's America என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளார். இப்படம் அமெரிக்கா முழுவதும் 1091 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
ஒபாமாவை கடுமையாக சாடி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அமெரிக்கர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை 1800 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒபாமா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் விளக்கியுள்ளார் திணேஷ். இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வசூல் கிடைத்து வருகிறதாம்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான வார இறுதி நாட்களில் இப்படம் 6.2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம். ஒவ்வொரு காட்சிக்கும் சராசரியாக 5940 டாலர் பணத்தை இது வாரியுள்ளது. இதுவரை இப்படி ஒரு வசூலை சமீப காலத்தில் எந்தப் படம் ஈட்டியதில்லை என்கிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை மட்டும் இப்படம் 1.2 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
2.1 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இந்த டாக்குமெண்டரிப் படம். இப்படத்தின் பன்ச் லைன் - Love Him. Hate Him. You Don't Know Him - என்பதாகும். இப்படம் வெளியானது முதல் இதுவரை 10.3 மில்லியன் டாலரை வசூலித்துக் குவித்துள்ளதாம்.
இந்த ஆண்டில் மிகப் பெரிய வசூலை ஈட்டிய டாக்குமெண்டரிப் படம் என்ற பெயரையும் திணேஷின் டாக்குமெண்டரி பெற்றுள்ளது.
இப்படத்தை ஜெரால்ட் மோலன், டோக் செய்ன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜான் சல்லிவனுடன் இணைந்து திணேஷ் டிசோசா இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் மொத்தமாக புளோரிடாவில் குவி்ந்துள்ளனர். அங்குதான் குடியரசுக் கட்சியின் மாநாடு தற்போது நடந்து வருகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திணேஷ் டிசோசாவின் டாக்குமெண்டரி ஒபாமாவை பெரும் சரிவுக்குள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
திணேஷ் எழதிய The Roots of Obama's Rage என்ற நூலைத் தழுவித்தான் இந்த டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் தனித்துவத்தையும், அதன் ஆதிக்கத்தையும் நீர்த்துப் போகும் அளவுக்கு ஒபாமா செயல்பட்டு வருகிறார் என்றும் அவரது கென்யத் தந்தையிடமிருந்து வந்த அடிப்படை உணர்வுகளுடன் அவர் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அமெரிக்காவை அவர் தாழ்த்தி விட்டார் என்றும் இந்த டாக்குமெண்டரியில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒபாமா மீண்டும் அதிபரானால் நாடு பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் இதில் எச்சரிக்கைச் செய்தி தரப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த டாக்குமெண்டரிப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் பரபரப்பையும், சூடான விவாதங்களையும் ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை.

No comments:

Post a Comment