சென்னை: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் கொண்ட 64 ஒருங்கிணைந்த வளாகங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 2 வீதம் ஏற்படுத்தப்படும் இந்த சிறப்பு இல்லங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உதவியுடன் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வாழும் முதியோர்களுக்கு பாதுகாப்பினையும் நாகரிகமான, உசிதமான வாழ்க்கையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் அடிப்படையில், ஜெயலலிதா பதவியேற்றவுடன் பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்.
தங்களை கவனித்துக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், தினசரி வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ தேவைகள் முதலியவற்றிற்காக மிகவும் அல்லல்படும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகளையும் நிறைவு செய்தல் அவசியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கவும், மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் ஒரு பகுதியாக அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தினை சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2011-12ம் நிதியாண்டில் முன்னோடி முயற்சியாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 2 வட்டாரங்கள் என முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சிறப்பு இல்லங்களில் முதியோர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் பாசப் பிணைப்புடன் தங்களுக்குள் அன்பு, மரியாதை போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அருகருகே வசிப்பார்கள்.
முதியோர் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இந்த வளாகங்கள் பள்ளிக் கூடங்கள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த சிறப்பு இல்லங்களில், அபாயகரமான சூழ்நிலையில் வாழக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள், புலம் பெயர்ந்த குடும்பங்கள் போன்ற சமூகரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தொற்றுடைய நோய் உள்ள குழந்தைகள், நிராதரவான குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கடுமையான மருத்துவ சிக்கல் உள்ள நிராதரவான முதியோர்கள் ஆகியோர் தங்க வைக்கப்படுவார்கள்.
ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றிற்கு தொடக்க தொடரா செலவினமாக ரூபாய் 2.75 லட்சமும், தொடர் செலவினமாக ரூபாய் 18.40 லட்சம் என மொத்தம் 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட 12 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமன்றி அவர்களது எதிர்கால வாழ்வும் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment