
கோவை : மனைவியை இழந்த நண்பருக்கு அப்துல் கலாம் நேரில் ஆறுதல் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கல்லூரித் தோழர் சம்பத்குமார். கோவை சாய்பாபா காலனி பொன்னுசாமி நகரில் வசிக்கிறார். இவரது மனைவி சரோஜா(71), நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த 21ம் தேதி இறந்தார். இதை அறிந்த அப்துல்கலாம், நண்பருக்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். நேற்று காலை சம்பத்குமார் வீட்டுக்குச் சென்று, சரோஜாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அந்த போட்டோவில், ‘சரோஜா அம்மா புனிதப் பிறவி. குடும்பத்தின் அரும்பெரும் சொத்து. சம்பத் வாழ்க்கையில் அவர் ஒரு பொக்கிஷம். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். எல்லாருக்காகவும் அவர் பிரார்த்தனை செய்வார்‘ என எழுதினார்.
பின்னர் சம்பத்குமாரின் அருகில் அமர்ந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவிக்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். சம்பத்குமாரிடம், ‘இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். மனைவியின் பெயரில் துவக்கப்பட்டுள்ள சேவ் டாட்டர்ஸ் அமைப்பு மூலம் அதிகளவில் அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்’ என கூறினார்.
சம்பத்குமார் கூறுகையில், ‘1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம், நான், கேரளாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஒன்றாக படித்தோம். வெவ்வேறு மதங்களை சேர்ந்த நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். மூவரும் நண்பர்களானோம். படித்து 62 ஆண்டுகளாகியும் அப்துல்கலாம் நட்பை மறக்கவில்லை. அவர் இன்று என்னை சந்தித்தது மிகப்பெரிய ஆறுதல். இறைவனே ஆசி கூறியதாக எண்ணுகிறேன்’ என நெகிழ்ச்சி யுடன் கூறினார்.
No comments:
Post a Comment